மகாராஷ்டிரா தேர்தல் முடிந்து மிகத்தாமதமாக விழித்தெழுந்திருக்கிறது மகாவிகாஸ் அகாடி கூட்டணி. தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்த்தப்பட்டு, தங்களது வெற்றி திருடப்பட்டிருப்பதாக கூக்குரலெழுப்பி, மத்திய தேர்தல் ஆணையத்துக்கு புகார் மனு அனுப்பிக்கொண்டிருக்கின்றனர் மகாவிகாஸ் அகாடி கூட்டணியினர்.
தங்களது வாதத்துக்கு ஆதரவாக அக்கட்சிகள் சொல்வது இதைத்தான். மகாவிகாஸ் அகாடி கூட்டணியின் ஆதரவாளர்கள், ஒவ்வொரு தொகுதியிலும் 10,000 பேர் நீக்கப்பட்டிருக்கின்றனர். இதை மறைக்க, பா.ஜ.க. கூட்டணி, புதிதாக 10,000 பேரைச் சேர்த் திருக்கிறது. அதாவது, மக்களவைத் தேர்தலுக்குப்பின் ஒட்டுமொத்தமாக மகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆதரவு வாக்காளர்கள் 30 லட்சம் பேர் வரை நீக்கப்பட்டிருக் கிறார்கள் என்கிறது.
முக்கியமாக, அதீத வாக்காளர் சேர்ப்பால் 50 தொகுதிகளில், சராசரியாக 50,000 வாக்காளர்கள் அதிகரித்திருக்கின்றனர். அதில் 47 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது. இந்த வாக்காளர் சேர்க்கை, நீக்கம் விவகாரத்தை அக்டோபரிலே நாங்கள் எழுப்பினோம். ஆனால், தேர்தல் ஆணையம் அதற்கு முறையாகப் பதிலளிக்கவில்லை என குற்றம்சாட்டுகிறார் மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோலே.
துல்ஜாபூர் சட்டமன்றத் தொகுதியில் ஏராளமான போலி வாக்காளர் பதிவுகளுக்கு எதிராக தாராஷிவ் சைபர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த வாக்காளர் பதிவு அதிகாரி, தங்களின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியதாகத் தெரி வித்தார்.
புள்ளிவிவரப்படி, மக்களவைத் தேர்தலுக்கும் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கும் மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்கு 32.8 லட்சம் வாக்குகள் குறைந் திருக்கின்றது. தங்கள் கூட்டணியின் 30 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர் இரண்டு விவரங்களும் பொருந்திப் போவது தற்செயல்தானா? எனக் கேள்வியெழுப்புகின்றனர்.
மேலுமொரு புள்ளிவிவரத் தையும் காங்கிரஸ் கூட்டணி சுட்டிக்காட்டுகிறது. 2019 மக்களவைத் தேர்தலிலிருந்து, 2024 மக்களவைத் தேர்தல் வரை மகாராஷ்டிராவில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 37 லட்சம். அதாவது ஐந்து வருடத்தில் 37 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
மாறாக, மக்களவைத் தேர்த லுக்கும், சட்டமன்றத் தேர்தலுக்கு மான 5 மாத இடைவெளியில் புதிதாக 47 லட்சம் வாக்காளர்கள் இணைக் கப்பட்டிருக்கின்றனர்.
மேலும், மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்களித்தவர்களைவிட, சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணிக்கு 67.7 லட்சம் பேர் கூடுதலாக வாக்களித்துள்ளனர்.
மகாராஷ்டிர தேர்தலில், தேர்தலுக்கு 3 மாதங்கள் முன்பாக பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் நிதியுதவி அளிக்கும் திட்டத்தை மகாராஷ்டிரா பா.ஜ.க. அறிமுகம் செய்தது. இத்திட்டத்தால் அக்கட்சிக்கும் 2 முதல் 3 சதவிகிதம் வாக்குகள் கூடுதலாகக் கிடைக்கும் என கூறப்பட்டது. அதாவது 20 லட்சம் வாக்குகள் கூடுதலாகக் கிடைக்கும் என்பது கணிப்பு.
மாறாக, நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர் தலில் பா.ஜ.க. கூட்டணி 67.7 லட்சம் வாக்குகள் காங்கிரஸைவிட கூடுதலாகப் பெற்றது. அதில் புதிதாகச் சேர்க்கப்பட்ட 47 லட்சம் வாக்குகளைக் கழித்தால், பா.ஜ.க.வின் முன்னணி வெறும் 20.7 லட்சம்தான். ஆக, இந்தப் பொருத்தத்தையும் சந்தேகமாகப் பார்க்கிறது மகாவிகாஸ் அகாடி கூட்டணி.
தேர்தலில், அஜித் பவார் கட்சி சரத்பவாரின் கட்சிக்கு எதிராகப் போட்டியிட்ட 33 தொகுதிகளில் வென்றது. சரத்பவாருக்குக் கிடைத்த வாக்குகள் 72.8 லட்சம். மாறாக, அஜித்பவாருக்குக் கிடைத்ததோ 58.1 லட்சம் வாக்குகள். வாக்கு அதிகரித்து, வெற்றிபெற்ற தொகுதிகள் குறைந்திருப்பது ஒரு சந்தேகமென்றால், இரு கட்சிகளும் போட்டியிட்ட தொகுதிகளில் 33 தொகுதிகளில் அஜித்பவார் வென்றிருப்பது சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது. பாராளுமன்றத் தேர்தலில் வாங்கியதைவிட இந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 47.1 லட்சம் வாக்கு கள் குறைவாக வாங்கியிருக்கிறது. அதேசமயம் வாக்காளர்கள் பட்டியலில் புதிதாக இணைக்கப் பட்டுள்ள வாக்காளர் எண்ணிக்கை 47 லட்சம்.
இன்னொரு பக்கம் மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் வாக்குப் பதிவு நாளன்று மாலை பெரும்பாலான பூத்துகளில் கடைசி ஒரு மணி நேரத்தில் மட்டும் 76 லட்சம் வாக்குகள் பதிவாகியிருக்கிறது. அதாவது 7.83%. ஏன் கடைசி ஒரு மணி நேரத்தில் மட்டும் இந்த திடீர் வாக்குப்பதிவு அதிகரிப்பு? அரியானா தேர்தலிலும் இதேபோல கடைசி ஒரு மணி நேரத்தில் 6.7% மற்ற சமயத்தைவிட கூடுதலாகப் பதிவாகியிருக்கிறது. அதிலும் அரியானாவின் சில மாவட்டங்களில் இந்த விகிதம் 10% அதிகரித்திருக்கிறது.
இதற்கு தேர்தல் ஆணையம், “மகாராஷ்டிரா 1 லட்சம் பூத்துகள் கொண்டது. எனில், ஒரு பூத்தில் ஒரு மணி நேரத்தில் 76 பேர் வாக் களித்திருக்கிறார்கள். இதுவொன்றும் அத்தனை அதிகமான எண்ணிக்கையல்ல. இயல்பானது தான்”என பதிலளித்திருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகளோ, அதை ஏற்கவில்லை.
இன்னொருபுறம் அடிப்படையில் கேரளா வைச் சேர்ந்த, தற்போது அமெரிக்காவில் வசிக்கும் செய்யது சுஜா என்பவர், “மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தின் அதிர்வெண்ணை தனிமைப்படுத்தி அவற்றை ஹேக் செய்ய முடியுமெனவும். நடந்த மகாராஷ்டிர தேர்தலில் 288 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களில் 281 தொகுதிகளைச் சேர்ந்த எந்திரங்களை அணுகமுடிந்ததாகவும் கூறியிருக்கிறார்.
இது ஒருபுறமிருக்க, காங்கிரஸ் கூட்டணியின் குற்றச்சாட்டுகளை அடுத்து சுதாரித்த ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், வர விருக்கும் 2025 டெல்லி சட்டமன்றத் தேர்தலின் போது இதேபோன்ற வியூகத்தை டெல்லியில் பா.ஜ.க. பிரயோகித்துவிடக் கூடாது என எச்சரிக்கையானார். பா.ஜ.க. தலைவர்களின் கோரிக்கையையடுத்து ஷதாரா, ஜானக்புரி, லக்சுமி நகர் தொகுதிகளில் ஆயிரக்கணக்கான வாக்காளர் களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க பா.ஜ.க. தலைவர்கள் விண்ணப்பித்திருப்பதாகக் குறிப்பிட் டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், "ஷதாராவில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 11,018 வாக்காளர்களை நீக்க பா.ஜ.க. தலைவர்களால் விண்ணப்பம் அளிக்கப்பட்டு நீக்கப்பட்டிருக்கிறது. இந்த பட்டியலிலுள்ள 11,018 பேரில் 500 பேரை ரேண்டமாகத் தேர்வுசெய்து சோதித்ததில் அதில் 75 சதவிகிதம் பேர் குறிப்பிட்ட தொகுதியிலே, வாக்காளர் பட்டியலில் குறிப்பிட்ட முகவரியிலே தற்போதும் வசித்துவருவது தெரிந்துள்ளது. இது தேர்தல் நடைமுறையை சீர்குலைக்கும் செயல்'' என பா.ஜ.க.வின் செயலை விமர்சித்துள்ளார்.
அம்மாவட்ட நீதிபதி கெஜ்ரிவாலின் கூற்றை மறுத்துள்ளார். "நவம்பர் 5-ஆம் தேதிவரை 487 வாக்காளர்களைக் குறைக்கத்தான் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. அது தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும் இடம்பெற்றுள்ளது'' என் கிறார். அதேசமயம் டெல்லி மாநில தேர்தல் ஆணை யர் இதுகுறித்து இதுவரை கருத்துத் தெரிவிக்க வில்லை. மாறாக, ஆம் ஆத்மியோ, “வெளிப் படைத்தன்மையுடன் தேர்தல் ஆணையம் இன்று மாலைக்குள் (டிசம்பர்-6) அதன் வலைத் தளத்தில் பெயர் நீக்கத்துக்காக பதிவுசெய்யப்ட்ட அனைத்து விண்ணப்பங்களையும் அதன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்” என்கிறது.
11,000 வாக்குகள் என்பது அந்தத் தொகுதியின் மொத்த வாக்குகளில் 6 சதவிகிதம். அதேசமயம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி இந்தத் தொகுதியில் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதில் 11,000 பேரை நீக்கினால் எளிதாக பா.ஜ.க. வென்றுவிடும் என்ற கணக்கில் இந்த மோசடித் திட்டம் செயல்படுத்தப்பட் டுள்ளதாகக் கூறுகிறார்.
"வாக்காளர் நீக்கம் குடிமக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதி'' என்று கூறிய கெஜ்ரிவால், "தேர்தலில் தோல்வியடைவது பா.ஜ.க.வுக்குத் தெரியும், அதனால்தான் இது போன்ற நியாயமற்ற தந்திரங் களைக் கையாண்டு வருகிறது'' என்றார். "முறைகேடுகளில் ஈடு படும் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.
பிறருடைய அனுபவத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பாடம் படித்து சுதாரித்துவிட்டார். காங்கிரஸ் சுதாரிப்பது எப்போது?